வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஆபத்துகளுள் பேராபத்து எது?


நடப்பது நடக்கட்டும் என்று நடக்கப் போகும் ஆபத்திலிருந்து ஒதுங்குவதுதான் ஆபத்துகளுள் பேராபத்து.
இப்போது சென்னையில் டைடல் பார்க் இருக்கிறதே இந்த இடத்தை என்னால் மறக்கவே முடியாது. காரணம் இங்கு நான் சந்தித்த ஒரு விபத்துதான். இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த டைடல் பூங்கா சாலை வெறும் கருவேலங்காடாக இருந்த காலம் அது.
நடுவில் 30 அடி அகலத்தில் தார்ச்சாலை. இரு புறமும் மிக நெருக்கமாய்க் கருவேல மரங்கள். திடீரென இவற்றின் நடுவே இருந்து சைக்கிளில் ஓர் இளைஞர் வெளிப்பட்டார். நிற்கவேயில்லை. இருபுறமும் பார்க்காமல் மறுபுறம் கடக்கிறார். இது நான் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. என் வாகனமோ நெருங்கி விட்டது. பிரேக் அடித்தாலும் தவிர்க்கமுடியாத விபத்து.
இப்போது எனக்குள் இருந்த கேள்வியெல்லாம் சைக்கிளின் முன்டயரில் மோதுவதா, நடுவில் மோதுவதா, பின்டயரில் மோதுவதா என்பதுதான். வேறு வழியே இல்லை.
என் அனுபவம் அப்போது கைகொடுத்தது. நடுவில் தட்டினால் ஆள் காலி! முன் டயரில் தட்டினால், தட்டிய வேகத்தில் நம் வண்டிக்குள் வந்து விழுவான். பின் டயரில் தட்டினால் வாகனத்திற்கு வெளியில் போய் விழ வாய்ப்பு. இதன் மூலம் மறுபடி அந்த இளைஞர் மீது வாகனம் ஏறி ஓடிவிடாது.
எனவே பின் டயரில் மோதுவது என முடிவு செய்தேன். (அடப்பாவி மனுஷா! என்கிறீர்களா? என் நிலை எனக்கல்லவா தெரியும்?) அதன்படி மோதினேன். குறைந்த அடிகளோடு தப்பித்தார்.
இந்த நேரத்தில் நான் எதிர்கொள்ளும் ஆபத்து உறுதி என்று நான் ஸ்டியரிங்கை விட்டு விட்டு, ஐயோ! என்று கண்களை மூடிக்கொண்டு விட்டால் அது எவ்வளவு பேராபத்தாகியிருக்கும்!
இப்படித்தான் பல மனிதர்கள் தவறு செய்கிறார்கள். அதிலிருந்து விலகி ஓடுவதாக எண்ணிக் கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். அல்லது விஷயம் மேலும் முற்றும் வகையில் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறார்கள்.
மனபலம் தேவையென்றால் நம் நல விரும்பிகளைக் கலந்தாலோசிக்க வேண்டும். விரும்பி ஆள் பலம் தேவையென்றால் அதைக் கவனிக்க வேண்டும். நடப்பது நடக்கப் போகிறது என்றாலும் சேதாரம் குறைவாக இருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து அதன்படி செயல்பட வேண்டுமே தவிர, ஓடி ஒளியக் கூடாது

கருத்துகள் இல்லை: