வெள்ளி, 9 ஏப்ரல், 2010

தோல்வியை விட மோசமானது எது?

தோல்வியை விட மோசமானது எது?
தோல்வி என்பது பல நேரங்களில் கேவலமாகவும் அவமானகரமானதாகவும் நம்மவர்களால் எடுத்துக் கொள்ளவும் பார்க்கவும் படுகிறது.
தோல்வி, சீண்டப்பட்ட மரவட்டை போல், நத்தை போல் மனத்தை சுருளச் செய்தும் உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளச் செய்தும் வேடிக்கை பார்க்கிறது.
இதுகூடப் பரவாயில்லை. சிலரை இந்த உணர்வு தலைதூக்கவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இன்று டென்னிஸ் உலகின் முடிசூடாத மன்னனாக விளங்கும் ரோஜர் பெடரர் பல வெற்றிகளைக் குவிக்கிறார். ஆனால் இவரது வெற்றிகள் எல்லாம் சுலபத்தில் வாய்த்தவையோ வந்தவையோ அல்ல.
சில வெற்றிகள், கிட்டத்தட்ட தோல்வியை நெருங்கிப் போய்த் தொட்டுவிட்டுப் பிறகு கைக்கு வந்தவை. 6-4; 6-4; 6-6 என்று முடியப் போகிற தருணத்தில் 6-7; 2-6; 3-6 என்று அடியோடு திரும்பியவை.
இதற்குக் காரணம் ரோஜரின் போராடும் குணம்தான். இவரது வெற்றித் திறமையைவிட கடைசி நிமிடம்கூட விட்டுக் கொடுக்காத போராட்டமே என்னைப் பல நேரங்களில் கவர்ந்திருக்கிறது.
தோல்வியை நெருங்குகையில் ‘ஐயோ! தொலைந்தோம்!’ என்று எதிர்மறையாக எண்ணுவதை விட்டுவிட்டு, ‘இதில் மட்டும் ஜெயித்துவிட்டால் எப்படி இருக்கும்?” என்று சிந்திக்க ஆரம்பித்து, வெற்றியின் பலன்களை அடைவதாகவும் எண்ணிப் பார்த்தால் நமக்குள் உறங்கிக் கிடக்கும் மகத்தான சக்தி தட்டி எழுப்பப்பட வாய்ப்பு இருக்கிறது.
தோல்வியின் விளிம்பில் அதைத் திசை திருப்பவல்ல ரோஜா பெடரர் இந்த உத்தியைத்தான் கையாள்கிறாரோ என நான் ஊகிக்கிறேன். நிச்சயம் வெற்றி கிடைக்காது என்பது தெரிந்த பிறகும் மேற்கொள்ளப்படும் முயற்சி இருக்கிறதே, இது நமக்கு இதுவரை கிடைத்திராத புதிய அனுபவமாக இருக்கும்.
ஒரு முதல் தர ஆட்டக்காரருக்கு எதிராக ஒரு கற்றுக்குட்டி ஆட்டக்காரர் எடுக்கும் ஒரு பாயிண்ட் கூடப் பார்வையாளர்களால் பெரிய அளவில் கைதட்டி வரவேற்கப்படும். இந்த அனுபவம் ஒரு கற்றுக் குட்டி ஆட்டக்காரருக்கு மகத்தான மன எழுச்சியைத் தரவல்லது.
ஆக, எதிரி எவ்வளவு பலமானவன் என்பது முக்கியமல்ல. நம் முயற்சி எந்த அளவு உண்மையானதாக இருந்தது என்பதே முக்கியம்.
இந் நேரம் புரிந்திருக்கும் உங்களுக்கு. ஆம்! தோல்வியைவிட மோசமானது முயற்சி செய்யாமல் இருப்பதே!

கருத்துகள் இல்லை: